சிவராத்திரி
சிவராத்திரியின்போது நடத்தபடும் திருவிழாக்கள்
கொடியேற்றம், மாசி மாதம் மகா சிவராத்திரிக்கு முன்நாள் கொடியேற்றி கோவிலின் சுற்று மதிலுக்குள் திசை காட்ட வேண்டும்.
முதல் நாள் விழா
மகா சிவராத்திரி: மாசி மாதம் சதுர்த்தி திதி அன்று மகா சிவராத்திரி விழாவாக நண்பகல் ஐம்பொத்தொன்று பீடங்களிலும் சாமி கும்பிட்டு, பூசாரி சாமி ஆடி ஐம்பொத்தொன்று தெய்வங்களை பெயர் சொல்லி அழைத்து பேர் போட்டு சாமி ஆட வேண்டும். அன்று முன் இரவு பூஜை முடித்து பூசாரி வீட்டில் இருந்து ஆதிமூலப் பொருளாகிய "முத்துராங்" கத்தை பூசாரி அய்யா முதுகில் சுமந்து தனது பரிவாரங்கள் சூழ கோவிலுக்கு எடுத்து வர வேண்டும்.
இரண்டாவது நாள்
" சப்பரம் திருவீதி உலா": மறுநாள் விடிவதற்கு முன் அதாவது அமாவாசை அன்று விடிவதற்கு முன், சுவாமி அருளோடு வடக்கு வீட்டு சுவாமிக்கு உடைய கருப்பு உடை அணிந்து, இரண்டு சுற்றும் கீழ் வீட்டு காத்தவராய சுவாமியின் காவி உடை அணிந்து சுற்றி வருவார். மூன்று சுற்றும் வடக்கு சுற்றுப்புறத்தில் வடமேற்கு திசையில் உள்ள கூந்ப்பனைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்று குறி மேடையில் மக்களுக்கு நவாக்குச் சொல்லி, வரும்பொருள் உரைத்து உத்தரவு சொல்ல வேண்டும். அதே போன்று அமாவாசை அன்று பகல் ஐம்பொத்தொன்று பீடங்களுக்கும் பூஜை செய்து மூன்று முறை சுற்று பிரகாரம் வலம் வரவேண்டும். அமாவாசை அன்று இரவு பூசாரி தான் வாழும் இல்லத்தில் தனக்கும் முன் அருள் ஆட்சி செய்த குருமார்களுக்கு (பூசாரிகளுக்கு) விரதம் இருந்து அவர்களுக்கு தலைவாழை இலைகளில் அன்னம் படைத்தது பூஜை செய்து குருவழிபாடு செய்ய வேண்டும். அந்த விரத உணவை உண்பதற்கு நான்கு வகையறாக்களையும் பூசாரி அய்யா அழைக்க வேண்டும். அன்று இரவு அம்மன் திருஉருவம் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வரும். அன்று இரவு கோவிலில் பூஜை கிடையாது.
மூன்றாம் நாள் விழா.
பரிவேட்டை: அன்று சூரியன் உதயம் ஆவதற்கு முன் நாலாம் காலத்தில் (அதாவது பின் இரவு காலை 4 மணி முதல் 6 மணிக்குள்) ஐம்பத்து ஒன்று தெய்வங்களுக்கும் பூஜை செய்து அன்று காலை மூன்று முறை, சுற்றி வலம் வந்து குறி மேடையில் மக்களுக்கு நல்வாக்கு வழங்க வேண்டும். பகல் மூன்று சுற்றுகளில் முன் இரண்டு சுற்றுகளுக்கு பூசாரி அய்யா தன் கால்களில் முட்பாதகுறடு (ஆணிகள் கூர்மையாக அமைக்கப்பட்ட மரச்செருப்பு) அணிந்து சாமி ஆடி வர வேண்டும். அன்று இரவு வேட்டைப் பொங்கல் பொங்கி ஐம்பொத்தொன்று பீடங்களிலும் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடித்து பூசாரி அய்யா வேட்டைக்கு செல்லும் உடை அணிந்து தன் பரிவாரங்களுடன் பரிவேட்டைக்கு புறப்படுவார். கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள "வேட்டையாடி" மண்டபத்தில் அருளோடு பூசாரி அய்யா சாமி ஆடுவார். மண்டபத்திற்கு முன்பாக பரியாக பாவனை செய்து சிவப்பு நிறங்கொண்ட செம்மறி ஆடுகளை பரிவேட்டையாக பூசாரி அய்யா தொட்டு கொடுத்து கூர்மையான அரிவாள் கொண்டு ஒரே வெட்டில் ஒவ்வொரு கிடாவாக வெட்டுவார்கள். கிடாக்கள் வெட்டி முடிக்கப் பட்டவுடன் பூசாரி அய்யா சுவாமி அருளோடு ஐம்போதொன்று தெய்வங்களின் பேர் போட்டு சாமி ஆடுவர். வேட்டை முடிந்து பூசாரி அய்யாவும், பரிவாரங்களும் விடிவதற்கு முன்பாகவே கோவிலினுள் சென்றுவிட வேண்டும்.
நான்காம் நாள்
" பொங்கல் படைத்தல்": பரிவெட்டைகு மறுநாள் வேட்டை கறி உன்னும்நாள். அன்று தான் முடி காணிக்கை செலுத்தும் நாள். அன்று பகலிலும் இரவிலும் பூஜை இல்லை. மாசி மாதம் முதல் நாளில் இருந்து மாமிரம் உண்ணாமல் வேட்டை முடிந்த மறுநாள் தான் மாமிசம் உண்ண வேண்டும். அன்று இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் பொங்கல் நேற்றிக்கடன். பொங்கல் பொங்குபவர்கல், பலரும் பொங்கல் பொங்குவார்கள். அன்று பொங்கல் பொங்கிய குடும்பத்தினர்களுக்கு பெரிய வீடு, வடக்கு வீடு, பதினெட்டாம்படி, கீலவீடு முன்பாக பூசாரி அய்யா அவர்கள் அருள் வாக்கு வழங்குவார்கள்.
ஐந்தாம்நாள் திருவிழா
"மகேஸ்வரர் குருபூஜை":
அன்னதான விழாவாகும். அன்று உதய காலத்தில் "தடம்பார்ட்தல்" என்று ஒரு சுற்று பிரயாணம் உண்டு. அன்று இரவு எட்டு மணிக்கு "மகேஸ்வரர் குருபூஜை" நடைபெறும். முதல் பட்டம் ஏற்ற சிவத்த பூசாரி காலத்தில் ஆதிகுருவாகிய ஆதிகுருசாமிக்கு பூஜை செய்ய வேண்டும். அவர் நினைவாக அனைத்து சாதி மக்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் காத்தவநாடார் குலத்தில் துள்ளு முத்து காத்தவநாடார் குடும்பத்தில் உதித்த காத்தவநாடாரால் குருபூஜை. மண்டபம் அமைத்து குருபூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
குருபூஜை மண்டபத்தில் குருமார்களுக்கு (தெய்வநிலை அடைந்த பூசாரிகளுக்கு) அன்னம் படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். ஆலயத்தின் கொடிமரத்திற்கு மேற்புறம் உள்ள திருவாச்சிக்கு தென்புறம் "மகேஸ்வரர்" என்ற ஈஸ்வரனுக்கு அன்னம் படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். ஆதிகாலத்தில் காவி உடை அணிந்த துறவிகளை முதலில் உட்கார வைத்து அவர்கள் முன் அன்னம் படைப்பார்கள். துறவிகள் தன தவ வலிமையால் தனக்கு கிடைத்த புண்ணியங்களை, அன்ன சொரூபமாக முந்திபிச்சை ஏந்தி வருபவர்களுக்கு பிச்சையாக வழங்குவார்கள். முந்திபிசை எடுப்பவர்கள் மாசி மாதம் முதல்நாள் முதல் மாமிசம் உண்ணாமலும், விரதகாலதில் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் முறையாக கடைபிடித்து வர வேண்டும். மகேஸ்வரர் குருபூஜை நாள் அன்று காலை முதல், தண்ணீர், பானக்காரம் தவிர எந்த உணவையும் உண்ணக் கூடாது. முந்திபிச்சை எடுப்பவர்கள், பூஜை தொடங்குவதற்கு சில நிமிட நேரத்திற்கு முன் கோவில் கிணற்றில் குளித்து ஈர உடையுடன் வந்து பூசாரி அய்யாவிடம் முதலில் திருநீறு பெறவேண்டும். மகேஸ்வரர் பூஜை முடிந்த "அரகரா" பாடி முடித்தவுடன் முந்திபிச்சையாக கிடைத்த அந்தப் புண்ணியத்தை, அன்னத்தை கோவில் கிணற்றிற்கு அருகில் கொண்டு போய் வைத்து உண்ணவேண்டும். அன்னத்தை கீழே சிந்தக்கூடாது. முறையாக விரதம் இருந்து முந்திபிச்சை எடுத்து அந்த அன்னத்தை உண்பதால் முற்பிறவிகளிலும் இப்பிறவிகளிலும் செய்த தீவினைகள் தொலையும். வறுமை, நோய் அகலும். குலந்தைச் செல்வம் கிடைக்கும். கணவனுக்கு மனைவி முந்திபிச்சை எடுத்தால், கணவன் ஆயுள்கூடும். தாலிபாக்கியம் நிலைக்கும் என்பது முக்காலும் உண்மை. மகேஸ்வரனுக்கும் படைக்கப்பட்ட பிரசாதத்தை முதலில் முந்திபிச்சை எடுப்பவர்களுக்கு வழங்கப்படும். பின்பு பூஜை செய்த குருக்கள் அல்லது பூஜை செய்த மந்திரிக்கு ஒரு பங்கும், நாடார் குல அம்பலக்காரர் வீட்டுக்கு ஒரு பங்கும், ஆதியில் குருபூஜை விழாவை ஏற்படுத்திய துள்ளு முத்து காத்தவ நாடார் வழியில் மூத்த குடிகளாகிய, மணியாரம் பட்டியில் தற்போது வாழும் "மனியாரம்பட்டி காத்தன்" குடிகளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படுகின்றது.
ஆறாம் நாள்
"கயிறு குத்து": ஆறாம் திருவிழா மாரியம்மனுக்கு உரிய திருநாளாகும்.
அன்று இரவு பூசாரி அய்யா வாழும் இல்லத்தில் இருந்து விழா தொடங்கும். அங்கு கயிறு குத்துவதாக நேற்றிகடன் போட்டவர்களுக்கு கயிறு குத்துவார்கள். கயிறு குத்தி முடித்தவுடன் அவர்கள் இரு கரங்களிலும் அம்மன் காப்பு (வேப்பிலை) வைத்துக் கொண்டு சாமி ஆடி வருவார்கள். அக்கினிச்சட்டி ஏந்துவதாக நேற்றிக்கடன் போட்டவர்கள், அக்கினிச்சட்டி ஏந்தி வருவார்கள். பூசாரி அய்யா தன் பரிவாரங்களுடன் பறப்பட்டு சாமி ஆடிக்கொண்டு கடைவீதி தெருக்கள் வழியாக கோவில் வந்து சேர்வார்கள். கோவிலின் உட்புறம் சென்று பூசாரி அய்யா வேட்டைக்கு உரிய உடை அணிந்து தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு கோவிலின் சுற்றுப்ரகாரதில் வந்து அங்கு கயிறு குத்தியவர்கள், அக்கினிச்சட்டி ஏந்தி வந்தவர்கள் சார்பாக கிடா வெட்டி பலி கொடுப்பார்கள். கிடாவெட்டி முடிந்தவுடன் தன்பரிவாரங்கலுடன் ஒரு சுற்று வளம் வந்து குறி மேடையில் நல்வாக்கு வழங்குவார். ஆறாம் நாள் திருவிழா அத்துடன் நிறைவு பெரும்.
ஏழாம் நாள்
"மஞ்சள் நீராட்டு": ஆறுநாள் திருவிழாவை முறையாக முடித்து நிறைவு நாளாக கொண்டாடப்படும் விழாவாகும். அன்று காலை ஐம்பொதொன்று தெய்வங்களுக்கும் - பீடங்களுக்கும் பூஜை முடித்து பூசாரி அய்யா அவர்கள் மஞ்சள்நீறு கொண்டு கோவிலின் முக்கிய இடங்களில் தெளிப்பார்கள். பின்பு பூசாரி அய்யா அவர்கள் மஞ்சள் நீரை பக்தர்களுக்கு புனித நீராக, தீர்த்தமாக வழங்குவார்கள். பக்தர்கள் அந்த மஞ்சள் நீரை பெற்று தங்கள் இல்லங்களிலும், வியாபார நிலையங்களிலும் தெளிப்பார்கள். அந்த புனித மஞ்சள் நீரை தெளிப்பதால் மாற்றார்கள் போட்டி பொறாமை, பில்லி, சூனியம், பேய், பிசாசு தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நிறைவு விழா
மஞ்சள் நீராட்டு முடிந்து அடுத்தநாள் விடிவதற்கு முன், கோவில் வீட்டில் இருந்து சிவராத்திரி அன்று கோவிலுக்கு எடுத்துச் சென்ற மூலபொருலான "முத்துராங்" கத்தை பூசாரி அய்யா அம்பலக்காரர் மற்றும் நான்கு வகை பெரியோர்கள் எந்தவித சத்தமும் இல்லாமல் காகம் பறப்பதற்கு முன்பாக பூசாரி அய்யா வாழும் இல்லத்தில் உள்ள முத்துராங் அறையில் கட்டி தொங்கவிட்டு விடுவார்கள். அத்துடன் திருவிழா நிறைவுபெறும்.