ஆலய வரலாறு
மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி பகுதிகளை இராஜ கம்பளத்தார் என்ற தெலுங்கு தேசத்து ஜமீன்தார் ஆட்சி செய்து வந்தார். தேவதானப்பட்டி ஜமீன் குடும்பத்தை சார்ந்த பூசாரி நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.குழந்தை செல்வம் இல்லாத அரசர் ஒரு நாள் வேட்டைக்காக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் குதிரையில் சென்று கொன்றிந்தபொது ஆற்றின் கரையில் ஒரு பெட்டி மிதந்து வருவதை கண்டு ஆற்றில் இறங்கி அப்பெட்டியை தொட்டவுடன் ஒரு அசரிரிவாக்கு கேட்டது.
"பெட்டியை தொடதே! பெட்டியில் நான் காமாட்சி மந்திர ரூபமாக இருக்கின்றேன். என்னை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தவ முனிவர் கொடைக்கானல் மலை மீது உள்ள தலையாறு நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் உள்ள "கரியமால்" என்ற வனப்பகுதியில் "அம்மா மச்சு" என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் என்னை மந்திரரூபமாக அமைத்து வழிபட்டு வந்தார். தான் இறைநிலை அடையும் காலம் வருவதை தன் தவ வலிமையால் உணர்ந்து மூங்கில் கூடை ஒன்றில் மந்திர ரூபமான நான் உள்ள சக்கரத்தை வைத்து மந்திரத்தால் அதை காப்பிடு வைத்தார் . அதை "முத்துராங்கப்பெட்டி " என்று அழைத்தார் .அந்த முத்துராங்கப்பெட்டி பல நூறு ஆண்டுகளுக்குப்பின் இன்று பெருமழையின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்டது. என்னை வைத்து உன்னால் பாதுக்காக்க முடியாது. என் முறைகளை கடைப்பிடிக்க முடியாது என்னை விட்டுவிடு " என அன்னை காமாட்சி கூறினார் .
உடன் ஜமீன்தார் "அம்மா உன் முறைப்படி நானும் உன்னை வைத்து நானும் எனது வம்சத்தினரும் பூஜை செய்வோம் . முறை பிசகமாட்டோம் "என வாக்குறுதி கொடுத்து அன்னையின் சம்மதத்துடன் முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வந்து அன்னை காமாட்சிக்கு மஞ்சள் ஆற்றின் கரையில் ஆலயம் அமைத்தார் .
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சியின் அருள்வாக்கின்படி நாணல் புல் கொண்டு கூறை வேய்ந்தது அந்த குச்சிலுக்குள் அன்னை வாசம் செய்யும் முத்தாரங்கப் பெட்டியினை வைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னையை வணங்கி வந்தார்.
தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் அனைத்து சாதிமக்களும் வந்து வணங்கும் சக்தி வாய்ந்த ஆலயமாக விளங்கியது . அன்னை காமாட்சியை வணங்கியதால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் அடைந்தார்கள் . நோய்கள் குணமாகின . வறுமை தொலைந்து பலர் வளமையான வாழ்வு பெற்றனர் . தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தின் புகழ் நாடு எங்கும் பரவியது .
மதுரையை தலைநகராக கொண்டு தென்னாட்டை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்த காலம். தென்பாண்டிநாட்டில் உள்ள நாடார் குல வணிகர்கள் வணிக பொருட்களை பொதிமாடுகளில் ஏற்றி கொண்டு பல ஊர்களுக்கு சென்று விற்று வந்தனர் .
பாஞ்சாலங்குறிச்சியை சார்ந்த சாமணத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த நாகப்பநாடார் என்பவர் தன் பொதி மாடுகளில் வணிக பொருட்களை ஏற்றி கொண்டு வணிக பொருட்களை மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்திற்கு விற்பனை செய்வதற்காக வந்திருந்தார் . அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவரது நண்பர்களும் உறவினர்களும் தேவதானப்பட்டி அன்னை காமாட்சியை வணங்கி அங்கே மூன்று நாள் கோவிலில் தங்கி முறையாக விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று சொன்னதை ஏற்று வியாபாரத்திற்கு வந்த நாகப்பநாடார் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மூன்று நாள் கடுமையான விரதம் இருந்தார். அம்மா காமாட்சி எனக்கு வாரிசாக ஓர் ஆண்மகனை கொடு . நான் அவனுக்கு உன் மகன் காத்தவராயன் பெயர் வைக்கின்றேன் என மனமுருகி வேண்டிக்கொண்டார்
அன்னை காமாட்சியின் கருணையில் நாகப்பநாடார் மனைவி கருவுற்று பத்தாவது மாதம் அழகிய ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் .
நாகப்பநாடார் தன் மகனுக்கு காத்தவராயன் பெயர் என பெயர் சூட்டினார்.காத்தவராயன் வளர்ந்து வாலிப வயதை அடைந்தான் . நாகப்பநாடார் முதுமை பருவத்தை அடைந்தார் .தன் தகப்பன் செய்து வந்த வியாபாரத்தை காத்தவராயன் ஏற்று கொண்டான் . வியாபார நிமித்தம் பெரியகுளம் செல்லும் போதெல்லாம் தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் சென்று அன்னையின் பொற்பாதம் பணிந்து வருவான் . அன்னை காமாட்சியிடம் பயமும் பக்தியும் கொண்டு ஒழுக்கமுள்ளவனாக காத்தவராயன் விளங்கினான் .
தேவதானம்பட்டி மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்து ஜமீன்தார் பூஜை செய்து வந்தார் .அதற்குப்பின் அவரது மகனும் பேரனும் மட்டுமே பூஜை செய்ய முடிந்தது . அன்னை காமாட்சியின் வாக்குப்படி முறையாக பூஜை செய்யாத காரணத்தால் ஜமீன் குடும்பத்தில் பல தொல்லைகள் ஏற்பட்டன . தன் குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அன்னை காமாட்சி சொன்னபடி முறைகள் செலுத்த முடியாமை தான் காரணம் என்று புரிந்து கொண்டு இனி கோவிலில் பூஜையை நிறுத்தி விடுவது, கோவிலை மூடிவிடுவது என்று ஜமீன்தார் முடிவு செய்தார்.
அதை அறிந்த உள்ளூர் தமிழ் மக்களாகிய மன்னடியார் என்ற சாதியினர் அன்னை காமாட்சியின் மீது பக்தி கொண்டு கோவிலை பூட்ட வேண்டாம். நாங்களே கோவில் முறைகளை முழுமையாக கடைப்பிடித்து பூஜை செய்கின்றோம் . பூஜை பொறுப்பை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் . ஜமீன்தார் பூஜை செய்யும் பொறுப்பை மன்னடியர் சாதியிடம் ஒப்படைத்தார் . மன்னடியர் சாதியினர் மூன்று தலைமுறைகள் பூஜை செய்து வந்தனர் . மூன்றாவது தலைமுறையில் அன்னை காமாட்சி தன் இருப்பிடத்தை மாற்றி அமைக்க திருவுள்ளம் கொண்டாள். தனக்கு தொண்டு செய்யும் தொண்டனாக நாடார் குலத்தில் உதித்த காத்தவராயனை காமாட்சி தேர்ந்தெடுத்தாள்.
பொதிமாடுகளில் வாணிபப் பொருட்களை ஏற்றி கொண்டு பெரியகுளம் நோக்கி காத்தவராயன் சென்றான். வாணிபத்தை முடித்து கொண்டு ஊர் திரும்பும் வழியில் தேவதானம்பட்டி சென்று அன்னை காமாட்சியை வணங்க சென்றான். அவனுடன் விருதுபட்டி , சிவகாசி , மதுரை , திருமங்கலம் போன்ற ஊர்களை சேர்ந்த நாடார் குல வணிகர்களும் உடன் சென்றனர் . தங்களுடன் வந்த பொதிமாடுகளை கோவிலுக்கு முன்புறம் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் நிறுத்திவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார்கள். இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும் தூங்கி கொண்டிருந்த காத்தவராயன் தன்னை யாரோ தட்டி எழுப்புவது போன்று அறிந்து விழித்து எழுந்தான். ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ஒளி ஒன்று அவன் கண்களுக்கு தெரிந்தது. அவன் தன் உணர்வு இல்லாமல் மூலஸ்தானத்தில் முத்துராங்கப்பெட்டி இருப்பதை கண்டு அவனை அறியாமல் அதன் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தன் உடலில் ஏதோ ஓர் சக்திபுகுந்து தன்னை இயக்குவதை உணர்ந்தான்.
அன்னையின் முன் விழுந்து வணங்கி எழுந்த உடன் அவனை அறியாமல் சுயநினைவின்றி தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முத்தாரங்கப்பெட்டியை மூடி தன் தோளில் வைத்துக் கொண்டு கோவிலை விடு வெளியேறினான். நேரே தன் பொதிமாடுகள் உள்ள இடத்திற்கு சென்ற பின் தன் மாடுகளில் ஒன்றின் முதுகின் மீது முத்தாரங்கப் பெட்டியை வைத்து அதன் மீது துணி கொண்டு மூடினான், பின்பு கயிறு கொண்டு கீழே விழாமல் கட்டினான். கட்டி முடித்தவுடவுன் முத்தாரங்கப் பெட்டியை தன் முதுகில் சுமந்திருந்த பொதிமாடு மெல்ல நடக்க ஆரம்பித்தது. காத்தவாரயனும் மற்றும் வணிகர்களும் அந்த பொதி மாட்டை பின்பற்றி நடந்தார்கள். அவர்களால் அதை தொட முடியவில்லை. அவர்கள் நடக்க முடியாமல் நின்றால் அந்த மாடும் நிற்கும் . அவர்கள் ஓடி வந்தால் மாடும் ஓடும் . அவர்கள் அனைவரும் அன்னையின் தவபுதல்வர்களாக அன்னையின் பின் நடந்து சென்றார்கள். காத்தாவரயன் காமாட்சி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்து முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வரும் போது தூங்கியவர்கள் போக மீதி பேர்கள் மயக்கநிலை அடைந்தார்கள் .
பொழுது புலர்ந்த உடன் மூலஸ்தானத்தில் இருந்த அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப் பெட்டியை காணவில்லை என்பதை அறிந்தவுடன் பூஜை செய்து வந்த மன்னடியார்கள் பயம் கொண்டார்கள். ஒரு பக்கம் தெய்வ குற்றம் மறுபக்கம் ஜமீந்தாருக்கு என்ன பதில் கூறுவது அவரது தண்டனையிலிருந்து எப்படி தப்புவது என ஆலோசனை செய்தனர். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். முத்தாரங்க பெட்டி காணமல் போன விபரம் ஜமீனுக்கும் மக்களுக்கும் தெரிவதற்கு முன் கோவில் கதவை மூடினார்கள். கோவில் முன் பக்தர்களை அழைத்து எங்களால் முறையாக பூஜை செய்ய முடியவில்லை. ஆதலால் கோவில் திருக்கதவை நங்கள் மூடுகின்றோம். எவரேனும் இதை திறக்க கூடாது. இது அன்னை காமாட்சியின் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தனர்.பின் பூசாரியும் அவரது குடும்பத்தினரும் ஜமீன்தாரின் தண்டனைக்கு பயந்து கொடைகானல் மலையில் உள்ள தண்டிக்குடி கிராமத்தில் போய் குடியேறினர். அன்றிலிருந்து இன்று வரை தேவதானப்பட்டி அன்னை காமாட்சி அம்மன் ஆலயக்கதவுகள் திறக்கப்படவே இல்லை. ஆலயக்கதவுகளுக்கு முன் திருவாட்சி அமைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னை காமாட்சியை மக்கள் வணங்கி வருகின்றார்கள்
காத்தவராய நாடரும் அவரது நண்பர்களும் தங்கள் ஊர் நோக்கி வரும்போது பல இடங்களில் தங்கி வந்தார்கள். அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் மதுரை வந்த நாடார் குல மக்களில் மதுரையை சேர்ந்தவர்கள் மதுரையில் சிம்மக்கல் அருகில் அன்னையின் அருள்வாக்கின்படி காமாட்சி அம்மன் ஆலயம் ஒன்று அமைத்தார்கள். மதுரையில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் வந்து சேர்ந்தவுடன் அன்னை காமட்சியின் அருள்வாக்கின்படி திருமங்கலத்தில் திருமங்கலத்தை சார்ந்த நாடார் குல மக்கள் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்தார்கள். திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட காத்தவராய நாடரும் மற்றும் வணிகர்களும் விருதுபட்டி வந்து சேர்ந்தார்கள். அன்னையின் அருள்வாக்கின்படி விருதுபட்டியை சார்ந்த நாடார் குல மக்கள் விருதுபட்டியில் அன்னை காமாட்சிக்கு ஓர் ஆலயம் அமைத்தார்கள். விருதுபட்டியிலிருந்து புறப்பட்டு அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் காத்தவராய நாடார் தன் சொந்த ஊரான சாமணத்தம் என்ற கிராமத்தை வந்தடைந்தார்.
தன் ஊர் வந்த காத்தவராய நாடார் அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியை வைத்து சாமனத்தத்தில் ஓர் ஆலயம் அமைத்தார்.
ஆலயம் அமைத்து அன்னைக்கு காத்தவராய நாடார் பூஜை செய்தார். அன்னையின் அருளை பூரணமாக பெற்ற காத்தவராய நாடருக்கு சாமி ஆட்டம் வந்தது. அன்னை காம்ட்சியை வந்து வணங்கும் மக்களுக்கு அன்னையின் அருளலால் நல்வாக்குரைத்தார். அவர் சொல் பலிதமானது. பல ஊர்களில் இருந்து பக்கதர்கள் வந்து அன்னை காமாட்சியை வணங்கி காத்தவராய நாடாரிடம் நல்வாக்கு பெற்று நலம் பல பெற்றனர்.
காத்தவராய நாடருக்கு ஐந்து ஆண் மக்களை கொடுத்தாள். காத்தவராய நாடார் தன் ஐந்து ஆண் மக்களுக்கு
தில்லை வணங்காத்தான்
ஆதிமுத்துக் காத்தான்
துள்ளுமுத்துக் காத்தான்
நாகப்ப நாடார்
பூவுலகங் காத்தான்
என பெயர் சூட்டினார் . ஐவரும் திருமணம் முடித்து பல ஊர்களில் குடியேறினார்கள். இந்த ஐந்து காத்தான் வழி வந்தவர்கள் இன்று தமிழ் நாட்டில் பல ஊர்களில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். காலம் பல ஆண்டுகளை கடந்தது. காத்தவராய நாடார் வயோதிகம் அடைந்தார்.தன் ஆண்மக்கள் அனைவரும் வியாபாரிகள் , வியாபார நிமித்தமாக பல ஊர்களுக்கு சென்று பல மாதங்கள் களைத்து தான் திரும்ப வர முடியும். அவர்களால் அன்னை காமாட்சிக்கு முறையாக பூஜை செய்ய முடியாது. தனக்கோ வயது அதிகம் ஆகிவிட்டது. தனக்குப் பின் பூஜை யார் செய்வது என்று மனம் கலங்கினார்.
சாமணத்தம் கிராமத்திலிருந்து சில மைல் தூரத்தில் தூரத்தில் உள்ள முப்பிலிபட்டி கிராமத்தில் காத்தவராய நாடாரின் மைத்துனர் தங்கைய நாடார் வாழ்ந்து வந்தார். அவர் ஓர் விவசாயி முப்பிலிபட்டியில் அவருக்கு விலை நிலங்கள் உண்டு . அவர் பக்திமான், ஒழுக்கசீலர் , அவர் தன் அக்கா வீட்டிற்கு சாமணத்தத்திற்கு வரும் போது எல்லாம் தனது அக்கா புருஷன் காத்தவராய நாடார் அமைத்த அன்னை காமாட்சி ஆலயத்தில் அன்னையை வணங்குவார். தங்கைய நாடரும் அன்னை காமாட்சியை தன் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டார். அவருக்கும் அன்னையின் அருளால் சாமி ஆட்டம் வரும்.
காத்தவராய நாடரும் அவர் மைத்துனர் தங்கைய நாடரும் சேர்ந்து சாமணத்தத்திலிருந்து அன்னை காமாட்சி ஆலயத்தை மாற்றி முப்பிலிபட்டியில் அன்னை காமாட்சி ஆலயத்தை அமைத்தார்கள். தங்கைய நாடார் பூசாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் . காத்தவராய நாடார் தருமகர்த்தாவாகவும் மருள் ஆடியாகவும் விளங்கினார்.
கி.பி. 1700 முதல் 1734 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓர்நாள்; தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுக்கா புதியம்புத்தூர் அருகாமையில் உள்ள "முப்பிலிபட்டி" என்ற கிராமத்தில் அன்னை காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நாடார் குல மக்கள் குடும்பத்துடன் சாமி கும்பிட வந்திருந்தனர்.
அந்த கோவில் காத்தவ நாடார், பூசாரி நாடார் என்ற இரண்டு வகையாரக்களின் குலதெய்வ வழிபாட்டு கோவில் ஆகும்.
கோவில் பரம்பரை பூசாரி பூ.த. பொன்னுசாமி நாடாருக்கு இரண்டு ஆண் மக்கள். மூத்தவன் பெயர் குருசாமி. இளையவன் பெயர் தங்கையா .
பூசாரி பொன்னுசாமி நாடார் இறைவனடி சேர்ந்தார். அவருக்கு பின் அவர் மூத்த மகன் குருசாமி பூசாரியாக பட்டம் சூட்டபட்ட வேண்டும். ஆனால் குருசாமி மிக இளைய வயது உடையவனாக இருந்தான். ஆதலால் அவனுக்கு பட்டம் சூட்டாமல் அவன் சித்தப்பன் சின்னையா நாடாருக்கு பூசாரியாக பட்டம் சூட்டினார்கள். சில ஆண்டுகள் கழிந்தன. குருசாமி வாலிப வயதை அடைந்தான். அன்று சிவராத்திரி திருவிழா குருசாமிக்கு அன்னை காமாட்சியின் அருள் கிட்டியது. அவனுக்கு சாமி ஆட்டம் வந்தவுடன் அவனைச் சேர்ந்தவர்கள் பூசாரி சின்னையா நாடாரிடம் பட்டத்துக்கு உரியவன் வந்து விட்டான், தாங்கள் விலகிக் கொண்டு அவனுக்குரிய பூசாரி பட்டத்தை அவனுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். சின்னப்ப நாடார் பூசாரி பட்டத்தை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார்.
அக்கோவில் கும்பிடும் பூசாரி நாடார் , காத்தவ நாடார் ஆகிய இரு வகையராக்களும் சிலர் பூசாரி சின்னையா நாடார்க்கு ஆதரவாகவும் மற்றும் சிலர் குருசாமிக்கு ஆதரவாகும் திரண்டனர். கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
அன்று இரவு குருசாமிக்கு சுவாமி ஆதாரனை ஆகியது. சாமி ஆடிக் கொண்டு உத்தரவு கொடுத்தான்.
அப்பா இந்த ஊருக்கும் இந்த கோவிலுக்கும் அழிவு ஏற்படப் போகின்றது. நீங்கள் அனைவரும் இந்த ஊரை விட்டு வேறு ஊர் போய் விடுங்கள். எல்லைக்கு வடபாகத்தில் இருந்து வந்திருக்கும் காத்தானும் அவனுடன் வந்திருக்கும் மூன்று பேர்களும் துணை வர என் பாலகன் (குருசாமி) ஆலயத்தில் உள்ள முத்தாறங்கப் பெட்டியை எடுத்துக் கொண்டு இன்று இரவு நாலாம் காலத்தில் எல்லை கடந்து சென்று விடுங்கள். என் இடத்தை மாற்றி கீழஈராலில் என் ஆலயத்தை அமைகின்றேன். அங்கு வந்து என்னை வணகும் மக்களை வாழ வைப்பேன் என்று அருள் வாக்கு கிடைத்தது.
கீழஈராலை சேர்ந்த கா.ப.தில்லைவனங்காத்தவ நாடாரும் , புங்கவர்ணம் கிராமத்தை சேர்ந்த கா.பூ.முத்துக் காத்தவ நாடாரும் விருதுபட்டியை சேர்ந்த கா.மு.நாகப்ப நாடாரும் குருசாமிக்கு துணையாக சென்றார்கள். கீழஈராலை சேர்ந்த கா.ப.தில்லைவனங்காத்தவநாடார் குருசாமியின் தாய்மாமன் ஆவார்.
எவரும் அறியாமல் அன்னை காமாட்சியின் துணை கொண்டு மூலஸ்தானத்திலிருந்து முத்துராங்கப்பெட்டியை குருசாமி எடுத்து தன் தலை மேல் வைத்துக் கொண்டு மூவர் துணையுடன் எல்லை கடந்து இரவோடு இரவாக காடு வழியில் கன்னக்கட்டை என்ற கிராமத்தை அடைந்தனர். அந்த கிராமத்தில் திருசெந்தூர் செல்லும் பாதைக்கு மங்கம்மா சாலை என்று பெயர் அந்த சாலை மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை, எட்டயபுரம் , கீழஈரால், சோழபுரம், கன்னக்கட்டை, முப்பிலிப்பட்டி வழியாக திருச்செந்தூர் செல்லும்.
கன்னக்கட்டை கிராமத்தில் உள்ள மங்கம்மா சாலைக்கருகில் உள்ள ஓர் கண்மாய் கரையில் ஓர் மரத்தடியில் உள்ள ஆவரஞ்செடிக்கருகில் காலை ஐந்து மணி அளவில் சற்று நின்று இளைப்பாரினார்கள். முத்தாரங்கப்பெட்டியுடன் அவர்கள் நின்ற அவர்கள் நின்ற அந்த இடத்தில் நூறு ஆண்டுகளுக்கு பின் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. அந்த ஆலயம் "காத்தான் கோவில்" என்று இன்று அழைக்கப்படுகின்றது . (கன்னக்கோட்டை காத்தான் கோவில் வரலாற்றை காண்க)
முத்தாரங்கப்பெட்டியுடன் புறப்பட்ட நால்வரும் அடுத்த சோழ புறம் கிராமத்தை அடைந்தார்கள். சோழபுரம் எட்டையபுரம் ஜமீனை சேர்ந்த கிராமம் ஆகும் . முப்பிலிபட்டியில் இருந்து தங்களை யாரேனும் துரத்தி வருவார்கள் என்ற அச்சத்தில் எங்கும் நிற்காமல் ஓட்டமும் நடையுமாக வந்து அசதி தீர சோழபுரம் வந்தவுடன் அங்குள்ள காத்தான் இல்லத்தில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெற்றிலை போட்டு இளைப்பாரினார்கள்.அவர்கள் முத்தாரங்கபெட்டியுடன் அமர்ந்து இளைப்பாறிய இடத்தில் பிற்காலத்தில் காத்தான் குடிகளால் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. அதுதான் சோழபுரத்தில் உள்ள "காமாட்சி அம்மன்" கோவிலாகும்.
முப்பிலிபட்டி கோவிலிருந்து முத்தாரங்கப் பெட்டியை, பூசாரி மகன் குருசாமியும் அவன் தாய் மாமன் காத்தான் மற்றும் சிலரும் எடுத்து சென்று விட்டார்கள் என்று அறிந்து சின்னைய நாடரை சார்ந்தவர்கள் கோபம் கொண்டார்கள். சற்று நேரத்தில் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. பாஞ்சாலங்குறிச்சி கொள்ளைக்காரன் கெட்டி பொம்மு தன் ஆட்களோடு முப்பிலிபட்டி நாடார் குல மக்களை கொள்ளை அடிக்க வருவதாக செய்தி வந்தது. செய்தி கொண்டு வந்தவன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் காவல் வேலை செய்யும் மாடசாமி என்பவன் ஆவான். அவன் புங்க வர்ணத்தம் கிராமத்தைச் சார்ந்தவன்.
காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து பாடுபட்ட பொருள்களை, ஆடுமாடு இவைகளை , அவனிடம் கொள்ளைக் கொடுக்க விரும்பாமல் நாடார் குல மக்கள் அவ்வூரை விட்டு வேறு ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுவது என்று முடிவு செய்து , அன்றே தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு வேறு பல ஊர்களில் குடியேறினர். முப்பிலிப்பட்டியிலிருந்து இரு வகையாராக்களும் வெளியேறினார்கள்.
பூசாரி வகையாராக்கள் தத்த மேனி, மார்த்தானம்பட்டி, கோசுகுண்டு, பேரிலோவன்பட்டி , தீத்தாம்பட்டி, நம்பியாபுரம், புங்கவர்ணத்தம், மேல ஈரால், கீழ ஈரால் போன்ற ஊர்களில் குடியேறினார்கள்.
காத்தான் குடிகள் விருதுப்பட்டி, கீழ ஈரால்,புங்கவர்ணத்தம், புதியம்புத்தூர், ஆதனூர், கழுகுமலை , சிவகாசி, தேனி, உசிலம்பட்டி, போடுபட்டி , போன்ற பல கிரமங்களில் குடியேறினார்கள்.
அன்னை காமாட்சியும் இருபத்து ஒன்று தெய்வங்களும் தன் அகத்தே கொண்ட "முத்தாரங்கப்பெட்டியை எடுத்துக் கொண்டு முப்பிலிப்பட்டியிலிருந்து புறப்பட்ட பூசாரி மகன் குருசாமியும் அவனின் தாய் மாமன் காத்தான் மற்றும் மூன்று பேர்களும் உதய காலம் ஏழு மணி அளவில் கீழ ஈரால் வந்து சேர்ந்தார்கள்.
கீழ ஈரால் கிராமத்தில் பெரிய நிலச்சுவான்தாராக கருப்பநாடார் என்பவர் வாழ்ந்து வந்தார் . கருப்பசாமி நாடார் நல்ல உழைப்பும், மன உறுதியும்,ஒழுக்கமும் நிறைந்தவர். அவர் துணைவியார் "குளத்தூர்" கிராமத்தை சார்ந்தவர் . தன் மனைவியின் தங்கையை (மைத்துனியை) தன் நண்பன் தில்லைவனம் காத்தானுக்கு திருமணம் முடித்து வைத்தார். இந்த திருமணத்தின் மூலம் கருப்பசாமி நாடரும் தில்லைவனம் காத்தானும் அண்ணன் தம்பி (சகலை) ஆகினார்கள். கருப்பசாமி நாடாருக்கு ஐந்து ஆண் மக்கள்
மங்கான் நாடான்
சிட்டு நாடான்
கருத்தை சின்ன நாடான்
வால் நாடான்
பொடி நாடான்
ஆகிய ஐந்து ஆண் மக்கள் ஆவர். இந்த ஐந்து ஆண் மக்களுடைய தகப்பன் வழி மக்கள் கீழ ஈராலை தாய்க்கிராமமாகக் கொண்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, மதுரை , சென்னை , கீழ ஈரால் , கொக்கரசன்பேட்டை, துரைசாமிபுரம் , தென்னம்பட்டி ஆகிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.
முப்பிலிபட்டியிலிருந்து கீழ ஈரால் வந்து சேர்ந்த பூசாரியும் காத்தானும் "முத்துராங்கப் பெட்டியை" கருப்ப நாடார் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
தன் அண்ணனும் நண்பனுமாகிய கருப்ப நாடாரிடம் காத்தான் நடந்த விவரங்களை எடுத்து எடுத்துச் சொன்னான். எல்லா விபரங்களையும் கருப்ப நாடார் கேட்டு தெரிந்து கொண்டார் . கொண்டு வந்த சாமியை இனி என்ன செய்வது என அனைவரும் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது பூசாரி மகன் குருசாமிக்கு சுவாமி ஆட்டம் வந்தது. அப்போது சுவாமி உத்தரவு கொடுத்தது.
ஆதிகாமாட்சி வந்திருக்கேன். என்னை ஆத்தங்கரையிலிருந்து காத்தான் பொதிமாட்டில் கொண்டு வந்தான். கொண்டு வந்த அவன் ஒரு தலைமுறை சாமணத்தம் கிராமத்தில் எனக்கு பணி விடை செய்து வழிபட்டான் . முறைகளை கடைபிடிக்க முடியாமல் என்னை அவன் மைத்துனனிடம் ஒப்படைத்தான் . மைத்துனன் வழி வந்தோர் எனக்கு பூசாரியாக நான்கு தலைமுறைகள் முப்பிலிப்பட்டியில் பூஜை செய்து வந்தனர்.உடன் இருந்து காத்தான் காத்து வந்தான்.என்னுடைய அருளட்சியை இடம் மாற்றி இங்கே (கீழ ஈராலில்) அமைகின்றேன். இவன் (பூசாரி மகன் குருசாமி) எனக்கு ஆசானாகவும் ,அவன் தம்பி மந்திரியாகவும் , காத்தான் காவலனாகவும் இருப்பார்கள். குருசாமி இனி "ஆதி குருசாமி" என்று அழைக்கப்படுவான். இவன் உடலில் நான் வாசஞ்செய்து வரும் மக்களுக்கு நல்வாக்கு உரைப்பேன். சொன்ன சொல் பலிதமாகும். என்னை நம்பி வணகும் மக்களை காப்பேன். இவன் தம்பி மந்திரி ஆட்டம் இன்றி அருள் வாக்குரைப்பன். காத்தான் குடி வந்தோர் என் ஆலய காவலனாகவும் , இருபத்தொன்று தெய்வங்களை தன் உடலில் ஏற்று மருள் ஆடியாகவும், அல்லல் காத்தானகவும் விளங்குவார்கள் என்று வாக்கு கிடைத்தது.
அப்போது சுவாமியை பார்த்து காத்தான் கேட்டான்.
"தாயே, உன் உத்தரவு படி நாங்கள் நடக்கின்றோம். உன்னை எங்கே எப்போது எந்த இடத்தில் நிலைப்படுத்துவது "
தாய் சொன்னாள்
"அப்பா இன்றிலிருந்து முன்னுற்றுபத்து நாட்களுக்கு இடையில் நாளும் கோளும் சரி இல்லை. முன்னுற்று பதினொன்றாம் நாள் என்னை சாலைக்கு மேற்கில் நிலை கொள்ள செய். அதுவரை என்னை தீட்டுபடாத வகையில் ஆள் இறங்காத கிணற்றில் கட்டி தொங்க விட்டுவிடு. அல்லது நிறை தானியபட்டறை உள்ள குதிருக்குள் என்னை வைத்து விடு." என உத்தரவு கிடைத்தது .அனைவரும் ஆலோசனை செய்தனர் . காத்தான் தன் நண்பனும் உறவு முறையில் அண்ணனுமாகிய கருப்ப நாடானிடம் "இந்த ஊரில் நம் நாடார் குலத்தில் நிறை தானியபட்டரை உள்ளவன் நீ ஒருவன் தான். நீ தான் அன்னை காமாட்சியும் இருபது ஒன்று தெய்வங்களும் உள்ள "முத்துராங்கபெட்டி"யை உன் தானிய பட்டரையில் வைத்திருந்து காத்துக் கொடுக்க வேண்டும்" என்றான்.
கருப்ப நாடார் சம்மதித்து தான் வீட்டில் உள்ள தானிய பட்டரையில் முத்தாரங்கப்பெட்டியை வைத்து முன்னூற்று பத்து நாள் பாதுகாத்து கொடுத்தான்.
இறை அருள் கூடி வரும் காலம் . தை திங்கள் நாளும் கோளும் சுபமாக அமைந்த நன்னாளில் முப்பிலிபட்டி பூசாரி அய்யா அவர்களின் தவப்புதல்வர் ஆதி குருசாமிக்கு சுவாமி அருள் பரிபூரணமாக ஆதாரனையாகியது . முத்துராங்கப்பெட்டியை தன் தலையில் சுமந்து கொண்டு மேற்கு திசை நோக்கி ஓடினார். உடன் காத்தான் தன் உறவினர்களை உடன் அழைத்துக் கொண்டு பின் சென்றார்.
ஊருக்கு மேல்புறம் நெல் விளையும் வயல்களும் , பருத்தி விளையும் புஞ்சை நிலங்களும் எட்டயபுரம் ஜமீனுக்கு சொந்தமானதாகும். நஞ்சையிலும் புஞ்சையிலும் விளையும் விழை பயிர்களை சேமித்து தவளைகளில் இருந்த பயிர்களை அடித்து பிரிப்பதற்கும் காயப்போடுவதற்குமான களை மேடு அங்கு இருந்தது .
முத்துராங்கப் பெட்டியுடன் ஆதி குருசாமி ஆதி குருசாமி களத்துமேட்டிற்கு வந்து சேர்ந்தார் .அன்னையின் உத்தரவுபடி களத்து மேட்டில் ஒன்பது பீடங்கள் அமைக்கப்பட்டன. அப்பீடங்கள் பசுஞ்சாணத்தில் மெழுகப்பட்டது.ஒன்பது பீடங்களில் இருபத்து ஒன்று பள்ளயமாக அமைக்கப்பட்டது. அன்னை காமாட்சியும் , அப்பன் ஏகம்பரநாதனும் காத்தவர சுவாமியும் பரிவார தெய்வங்களும் சேர்ந்து ஆலயம் அமைக்கப்பட்டது. ஆதி குருசாமி இருபத்துஒன்று பீடங்களுக்கும் பூஜை செய்தார். ஆதி குருசாமிக்கு சுவாமி அருள் ஆட்டம் வந்தது. சுவாமி சொன்னார்.
"அப்பா இந்த இடத்தில் ஆதி மூல சக்கரத்தை ஊன்றி உள்ளேன் . அச்சக்கரம் அதள பாதாளத்திற்கு சென்று நிலைப்பட்டுள்ளது. இன்று நான் பிடித்த முளையை எவரும் அசைக்கவோ அகற்றவோ முடியாது". உடன் காத்தனுக்கும் அருள் ஆட்டம் வந்தது. அவன் வாக்குரைத்தான்.
"முப்பிலிபட்டி முளை பிடுங்கிய சித்தன் வந்தான்". போடு என பேர் சொல்லி சாமி ஆடினார். "முப்பிலிபட்டி முறை பிடுங்கிய சித்தன்" என்பது ஆதி குருசாமியை குறிக்கும்.
ஆதி குருசாமி இருபத்தி ஒன்று தெய்வங்களின் பேர் சொல்லி சாமி ஆடினார் . பின் ஒன்பது பீடங்களில் இருபத்து ஒன்று தேங்காய்களை உடைத்து சாமி கும்பிட்டார். அன்று அங்கு வந்த அனைத்து மக்களுக்கும் அருள் வாக்குக் கிடைத்தது. இரவு நடுச்சாமதிற்கு பின் அனைவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் காலை பொழுது புலர்ந்தது.ஜமீன் வேலை ஆட்கள் களத்து மேட்டிற்கு வேலைக்கு வந்தனர். களத்து மேட்டில் ஒன்பது பீடங்கள் அமைக்க பட்டுள்ளதும் அதில் பூஜை செய்த அடையாளங்களையும் பார்த்து பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரெட்டியார் ஒருவரிடம், இங்கு என்ன நடந்தது? உங்களுக்கு தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு "நேற்று ராத்திரி சானாப்பயல்கள் சிலர் ஒண்ணா வந்து சாமி கும்பிட்டு சாமி ஆடிக் கொண்டிருந்தாணுக" என்று ரெட்டியார் கூறினார். உடன் ஜாமீன் ஆட்களில் ஒருவன் "சானாப்பயல்களுக்கு சாமி கும்பிட வேறு இடம் கிடைக்கலையோ? ஜாமீன் இடம் தான் கேட்குதோ?" எனச் சொல்லிக் கொண்டு சாமி கும்பிட்ட பீடத்தை தன் காலால் எட்டி உதைத்தான்.
பீடத்தை ஜாமீன் ஆள் எட்டி உதைத்தவுடன் பீடத்தின் அடியில் இருந்து நாகப்பாம்பு ஒன்று சீறிக் கொண்டு அவனை ஓடஓட விரட்டியது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற சொல்லுக்கு இணங்க ஜாமீன் ஆட்கள் பயந்து ஓடினர். பீடத்தை காவல் செய்வது போன்று நாகப்பாம்பு பீடத்தின் மீது படுத்துக் கொண்டது. பக்கத்தில் எவரேனும் சென்றால் சீறிக் கொண்டு விரட்டியது. இந்த அதிசயத்தை கண்ட ஜாமீன் ஆட்கள் அரசனிடம் செய்தியை சொல்ல எட்டயபுரம் நோக்கி சென்றனர்.
எட்டையபுரத்திற்கு முன்பு இப்பெயர் கிடையாது. "இளசை" என்பதே அப்பகுதிகளுக்கு முன்பு இருந்த பெயராகும்.
திருப்பதி மலைபகுதிகளை அடுத்து வேங்கடகிரி ஜமீனை சார்ந்த வேங்கடக்கிருஷ்ணன் என்ற தெலுங்கு கம்பளத்து நாயக்கர் குலத்தை சார்ந்த ஒரு வீரன் அங்கு ஒரு ஜமீனை உண்டாக்கினார். வேங்கடகிருஷ்ணப்பன் அந்தப் பகுதிகளுக்கு அரசனாக ஆட்சி செலுத்தினான். இரண்டரைக் கிராமங்களுக்கும் அதை சார்ந்த பகுதிகள் மட்டுமே அவனுக்கு சொந்தமானதங்க இருந்தது.
"ஈரால், இளமனத்தம், பாண்டவர் மங்கலத்தில் பாதி" ஆகிய இரண்டரை கிராமங்களே முதன் முதலில் அவன் ஆட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஆகும். மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அரசனும், அரசியும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கீழஈராலில் இருந்து வந்த கூலி ஆள் அரசினிடம் சொன்னான்.
"மகாராஜா, ஈராலில் நம் ஜாமீன் களத்துமேட்டில் சானப்பயலுக சாணியால் மெழுகி சாமி கும்பிட்டிருக்கானுக. அந்த இடத்தில் நாகப்பாம்பு ஒன்று காவல் காத்து நிற்குது. யாரையும் பக்கத்தில் அண்டவுடல. அதிசயமா இருக்கு இராஜா. தாங்கள் வந்து பார்க்கணும்" என்று குனிந்து பணிந்து கூறினான்.
"நீ போ நான் குதிரையில் வரேன்" என்று சொல்லி குதிரையில் உடன் கீழஈரால் நோக்கி புறப்பட்டார். உடன் அரசியார் மன்னனிடம் கூறினார்.
"நமக்கோ ஆண் வாரிசு இல்லை. சானபயதானே என நினைத்து அலட்சியபடுத்தாதிக, யார் வாயிலும் கெட்ட வாக்கு வாங்கிடாதீக எனக்கூறி அனுப்பினான்.
எட்டயபுரம் மன்னன் தன் பரிவாரங்களுடன் கீழஈரால் வந்து சேர்ந்தான். தற்போது கோவில் உள்ள இடத்தில பீடங்கள் அமைத்து சாமி கும்பிட்ட அடையாளங்களை கண்டான். ஒரு பீடத்தின்மீது நாகம் ஒன்று படுத்திருப்பதை கண்டான். தன் பணியாளை அழைத்து பூஜை செய்த ஆதி குருசாமியை அழைத்து வரச் சொன்னான். ஆதி குருசாமி புஞ்சையில் உழவு போட காட்டிற்கு சென்றிருந்தார். அரண்மனை ஆட்கள் குருசாமியை தேடி காட்டிற்கு சென்றார்கள். மகாராஜாவும் அவருடன் வந்தவர்களும் பக்கத்தில் இருந்த, வேல் வகையராக்களின் அன்னச் சத்திரத்தில் தங்கினார்கள்.
நிலத்தில் உழுது கொண்டிருந்த குருசாமியை அரண்மனை ஆட்கள் கண்டு மகாராஜா உன்னை பார்க்க வந்திருக்கார் என்று கூறி களத்து மேட்டிற்கு கூட்டி வந்தார்கள்.
மகாராஜாவை கண்ட குருசாமி "மகாராஜா அடியேன் குற்றம் ஏதும் செய்திருப்பின் மன்னித்தருள வேண்டும்" என்றார்.
"அந்த நாகப்பாம்பை போகச்சொல்லு" என மகாராஜா கூறினார்.
உடன் குருசாமி "நாகப்பா மறைந்து விடு. இனி நீ என கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும்" என உத்தரவிட்டார். குருசாமி சொன்னவுடன் நாகப்பாம்பு மறைந்த அதிசயத்தை கண்டு மகாராவும் மற்றவர்களும் வியப்படைந்தனர்.
மகாராஜா ஆதி குருசாமியை பார்த்து "சூடம் கொளுத்தி பூஜை செய்யுங்கள்" என்று கேட்டு கொண்டார்.
அரசனின் வேண்டுகோளை ஏற்று ஆதி குருசாமி சூடம் கொளுத்தி பூஜை செய்தார். ஆதி குருசாமிக்கு அருள் ஆட்டம் வந்தது "நான் அஞ்சனா மைக்காரன் அழகு முத்துக்காத்தான் வந்திருக்கேன், நீ உன் அரண்மனையைவிட்டு புறப்படும்போது உன் மனைவி உன்னிடம் என்னப்பா சொன்னாள்.
"நமக்கோ ஆண் வாரிசு இல்லை. சானாப்பயதானே என நினைத்து அலட்சியப்படுட்தாதீக, யார் வாயிலும் கெட்ட வாக்கு வாங்காதீக" எனச் சொன்னாளா? என சுவாமிகள் உத்தரவு சொன்னவுடன் மகாராஜா ஆச்சரியம் அடைந்தார். தானும் தன் மனைவியும் அரண்மனையில் அந்தரங்கமாக பேசி கொண்ட வார்த்தைகளை அப்படியே சுவாமி சொல்வதை கேட்டு பயந்து தரையில் சாஸ்டாங்கமாக ஆதிகுருசாமியின் பாதத்தில் விழுந்து பணிந்தார்.
"எழுந்திரு" என ஆதிகுருசாமி உத்தரவிட்டார்.
"அப்பா இந்த பொட்டலில் என் கோட்டையை நான் அமைக்கப் போகின்றேன். எனக்கு ஆலயம் அமைக்க எனக்கு இந்த இடம் வேண்டும், கொடுப்பாயா?" என சுவாமிகள் கேட்க உடன் மகாராஜா.
"இங்குள்ள நிலங்கள் அனைத்தும் எனக்கு சொந்தமானதுதான்: உங்களுக்குத் தேவையான இடத்தை எட்ட மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
உடன் சுவாமிகள் அருள் வாக்கு கூறினார்கள். "உனக்கு சொந்தமான எல்லா இடமும் எனக்கு வேண்டாம். நான் வலஞ்சுற்றி இடம் வரும் இடம் கொடுத்தல் போதும். எனக்கு நீ இடம் கொடுத்தாய். உனக்கு சொந்தமான பூமியை ஆள்வதற்கு உனக்கு ஆண் வாரிசு கொடுத்தேன். இன்றிலிருந்து பத்தாவது மாதம் உனக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும். நீ எனக்கு எட்டமட்டும் இடம் கொடுத்தாய் உனக்கு பிறக்கும் உன் மகனுக்கு "எட்டப்பட்டன்" என்று நான் பெயர் வைக்கின்றேன். எட்டுப்பட்டம் வரை உன் வம்சம் நிலைத்து ஆட்சி செய்யும்" என அருள்வாக்கு கிடைத்தது.
அலட்சியமாக ஈரால் வந்த மகாராஜா ஊர் திரும்பும்போது மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
குறிப்பு எடுக்கப்பட்டது - அருள்மிகு கீழஈரால் காமாட்சியம்மன் ஆலய வரலாறு புத்தகம் எழுதியவர்
அருள்நெரிசெல்வர் கா.ப.சா.பொன்பாண்டியன்.